Sunday, July 12, 2009

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்


நான் சர்வசாதாரணமாக 8 முதல் 10 இட்லிகள் சாப்பிடுகிறேன். அதுபோலவே 8 - 10 சப்பாத்திகள், பூரி, தோசை என்றெல்லாம் சாப்பிட்டாலும் அவை அனைத்தும் விரைவில் ஜீரணமாகி, மறுபடியும் பசி எடுத்துவிடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? அதிகப் பசியினால் உடல் சோர்ந்து, வாய் வரண்டு போகிறது. இந்த உபாதை தீர ஆயுர்வேத மருந்துகளும், என்ன உணவு வகைகளும் சாப்பிட வேண்டும்?

ரங்கராஜன், சென்னை.

உடலில் இயற்கையாக இருப்பதைவிட கபம் குறையும் போது பித்தம் சீற்றமடைந்து பசித்தீயின் அருகில் தங்கும். வாதத்துடன் சேர்ந்து தனக்கு உரியதான இயற்கைச் சூட்டினால் சீரணப்பையில் உள்ள நெருப்பிற்கு வலிமையைக் கொடுக்கும். இவ்வாறு பித்தத்தின் சூட்டினாலும் வாதத்தின் தூண்டுதலினாலும் வீறு கொண்ட பசித்தீ வரண்டு போன உடலில் உணவை லட்சியம் செய்யாமல் எத்தகைய உணவையும் விரைவில் அடிக்கடி எளிதில் செரிக்கச் செய்துவிடும். அத்துடன் நில்லாமல் உணவு சீரணமானதும் வலிமை பெற்ற பசித்தீக்கு உணவில்லாவிடில் இரத்தம் முதலிய தாதுக்களையும் எரிக்கும். அதனால்தான் உங்களுக்கு உடல் சோர்ந்து வாய் வரண்டு போகிறது.

நன்றாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை நீர் ஊற்றி அணைப்பதுபோல எளிதில் செரிக்காத எண்ணெய்ப் பசை, குளிர்ச்சியான வீர்யம் மற்றும் இனிப்புச் சுவை கொண்ட நீர்த்தோற்றத்தில் உள்ள குடிநீர் வகைகள், எள்ளுடன் கலந்து பக்குவம் செய்யப்பட்ட இறைச்சி மாவினாலும் வெல்லத்தினாலும் செய்யப்பட்ட உணவு வகைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசித்தீயைச் சமப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் பால் பாயசம், பயத்தம் பருப்பு, நெய் இவற்றைச் சேர்த்து பக்குவம் செய்த சாதம், நெய்யில் பக்குவம் செய்த தின்பண்டங்கள், நிலையாக நிற்கும் தண்ணீரில் வாழும் மீன் போன்ற பிராணிகளுடைய இறைச்சிகள், கொழுத்த செம்மறியாட்டின் மாமிசம் முதலியவற்றையும் மிகுதியான பசித்தீயைத் தணிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

1 டம்ளர் (சுமார் 250 கிராம்) பச்சரிசியில், 6 டம்ளர் தண்ணீர் விட்டு, சாதம் வெந்தவுடன் வடிகட்டி, அந்தக் கஞ்சியில், 5 கிராம் தேன் மெழுகு கலந்து உணவாகப் பருகலாம்.

1 டம்ளர் கோதுமையை வறுத்து மாவரைத்து நெய் கலந்து, சுமார் 4 - 5 டம்ளர் தண்ணீர் கலந்து கஞ்சியாகக் காய்ச்சி மதிய உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகப் பருக மிக நல்லது.

அரை டம்ளர் எள்ளு, அரை டம்ளர் உளுந்து முதலியவற்றை நன்றாக அரைத்துச் சுடுநீர் சர்க்கரை சேர்த்து உருண்டைகளாக்கிப் பக்குவம் செய்து உட்கொள்ளச் செய்தால் வீறு கொண்ட பசித்தீ மென்மையடையும்.

எண்ணெய்ப் பசையுள்ள மாமிச சூப்பைப் பருகுவது, நெய்யில் தேன் மெழுகு கலந்து குளிர்ந்த நீரும் கலந்து பருகுதல், கோதுமை மாவை நெய்யும் அல்லது பாலும் கலந்து உண்பது முதலியன நல்லது.

நெய், மாமிசத்திலுள்ள எண்ணெய்ப் பகுதி, எலும்புக்குள்ளிருக்கும் மஜ்ஜை இம்மூன்று வகை எண்ணெய்களையும் கோதுமை மாவுடன் கலந்து பாலுடன் சேர்த்துச் சாப்பிட, பசித்தீ அடங்கும். இதைச் சாப்பிட்ட பிறகு, பகலில் படுத்துத் தூங்குவது நல்லது.

இவ்வாறு கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிடுவதால் குறைந்துபோன கபம் வளரும். சீற்றமாயிருந்த பித்தமும் தணியும். வாதம் இயற்கை நிலையை அடையும். சடராக்கினி எனும் பசித்தீ சமநிலையை அடையும். தாதுக்கள் இயற்கைநிலையில் இருக்கும். சமநிலையிலுள்ள அக்கினி உணவைச் சரியாகப் பக்குவம் செய்து உடல் வளர்ச்சி ஆயுள் வலிமை இவற்றை வளர்க்கிறது.

மிருத்வீகாதி லேஹ்யம், பரூஷகாதி லேஹ்யம், அமிருத ப்ராசம் கிருதம், ப்ருகத்சாகலாதிகிருதம், சங்கபஸ்மம், ஹிங்குல பஸ்மம், அப்ரக பஸ்மம், விதார்தியாதி லேஹ்யம், திகார்ஷாதி கஷாயம் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள் கொழுந்துவிட்டு எரியும் பசித்தீயைச் சாந்தப்படுத்தும் வீர்யம் கொண்டவை. உங்களுக்கு அருகாமையிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகி, எது தங்களுக்குப் பொருந்துமோ அதை அவரிடமிருந்து வாங்கிச் சாப்பிட்டு உபாதையிலிருந்து விடுபடலாம்.
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 17: கடக ராசி - முருக்கன்; சிம்ம ராசி - பாதிரி


நண்டு வடிவில் வானத்தில் நட்சத்திரக் கூட்டம் காணப்படுகிறது. இதற்கு கடக ராசி என்பார்கள். இந்த நட்சத்திர மண்டலம் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. கடக ராசி மண்டலத்தின் கதிர்வீச்சுகள் மார்பகம் மற்றும் நெஞ்சு பகுதியில் உள்ள உள் உறுப்புகளைக் கட்டுப்படுத்துகிறது. இதன் கெட்ட கதிர்வீச்சுகள் நுரையீரல், இதயம், மார்பக மற்றும் நெஞ்சு எலும்புகளைப் பாதிக்கக்கூடும். பஞ்ச பூதங்களில் இது நீருடன் தொடர்பு கொண்டது. இந்த ராசியில் பிறந்தவர்கள் பெற்றோரிடம் அன்புடன் இருப்பார்கள். இவர்களுக்கு நிலைமாறும் குணங்கள் இருக்கும். திங்கட்கிழமை பிறந்தவர்களுக்கும் ஜூன் 21 ந்தேதி முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்களுக்கும் ஏற்ற மரம் முருக்கன் மரமாகும். இம்மரத்தை இவர்கள் அரைமணி நேரம் கட்டிப்பிடித்தால் அல்லது நிழலில் உட்கார்ந்தால் சந்திர கிரக தோஷமும், கடக ராசி நட்சத்திரங்களின் தோஷமும் நீங்கும்.

இந்தக் கிரகங்களினால் ஏற்பட்ட நோய்களும் குணம் பெறும் இதைப் பற்றி கடந்த இதழ்களில் சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள முருக்கன் மரத்தைப் பற்றிக் கட்டுரை எண் 5 இல் சொல்லப்பட்டுள்ளது. வாசகர்கள் விபரங்களுக்கு அதையும் பார்க்கலாம்.

இவ்விதழில் சிம்மராசிக்காரர்களுக்குப் பயன்தரும் பாதிரி மரத்தைப் பற்றியும் பார்ப்போம்.

சிம்ம ராசி - பாதிரி மரம்

ஒரு மனிதனின் உடல் அமைப்பு, மனநிலை, பழக்க வழக்கங்கள் எல்லாம் அவர்கள் பிறந்த நேரம், காலம் அப்போது ஆட்சியில் இருக்கும் கிரகம், நட்சத்திரங்களைப் பொறுத்துத்தான் அமைகிறது என வானவியல் சாஸ்திரம் கூறுகிறது. சூரிய கிரகம், சிம்ம ராசி, ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரை பிறந்தவர்கள் மகம் நட்சத்திரம், பூரம் நட்சத்திரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இயற்கையாகவே நிலையான குணம் உடையவர்களாகவும், பிள்ளைகள் மீது அளவில்லாத பாசம் இருப்பவர்களாகவும் விளங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் இதய நோய்களால் பாதிக்கப்படுவார்கள். இந்த ராசி, நட்சத்திரமானது பஞ்சபூதங்களில் நெருப்புடன் தொடர்புடையது.

சிம்மராசி மண்டல நட்சத்திரக் கூட்டத்தின், கெட்ட கதிர்வீச்சுகளால் பலவகையான நோய்கள் உண்டாகின்றன. அதற்குக் கிரக தோஷம், இராகு தோஷம் என்பார்கள். இதனைத் தடுக்கவும், தோஷத்தால் உண்டான நோய்களைக் குணப்படுத்தவும் பாதிரி மரம் பயன் அளிக்கிறது.

இம்மரத்துக்கு ஆங்கிலத்தில் Stereospermum suavelons d.c., PAADARIA எனவும் அழைப்பார்கள். இந்து முனிவர்கள், ஜெயின் தீர்த்தங்கரர்கள், சாதுக்கள் இம்மரத்தின் அடியில் தவம் இருந்து ஞானம் பெற்றுள்ளனர். பெருமளவு மின்காந்த சக்தி இம்மரத்தின் ஒருபகுதியுடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இவை, இயற்கையான சக்திகளை மனிதனுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மரம் பெண்களை மயக்க வைக்கும் பூக்களைத் தருகிறது. பெண்களை வசியப்படுத்த இதைப் போலிச் சாமியார்கள், மந்திரவாதிகள் பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.

இம்மரத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 12 வகையான நறுமணம் கொண்ட பூக்கள் மலருவது விசேஷமான செய்தியாகும்.

இலைச் சாற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் உஷ்ணம் நீங்கும்.

பூக்களை அரைத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் மேக நோய், விக்கல் குணம் பெறும்.

வேரை உலரவைத்துப் பவுடராக்கிச் சாப்பிட்டால் சர்க்கரைப் புண், மூலம் குணம் பெறும்.

ஒரு பங்கு மரப்பட்டை, 10 பங்கு தண்ணீரில் ஊற வைத்து அதனை 15 முதல் 30 மில்லி வரை, தினசரி 2 வேளை குடித்தால் இரத்த சோகை, இருமல், வயிற்றுவலி குணம் பெறும்.

இம்மரத்தின் பூக்கள், பட்டை, வேர், இலைகள் என அனைத்தும் சிறுநீரக நோய்க்கு நல்ல மருந்து எனக் கூறப்பட்டுள்ளது.

2 பங்கு மரப்பட்டையை 10 பங்கு தண்ணீரில் ஊற வைத்து 15 மில்லி அளவிற்கு தினசரி 2 முறை குடித்தால் இரத்த சோகை அதாவது ஹீமோகுளோபின் உற்பத்தி தடைபடுவதைக் குணமாக்குகிறது.

முருக்கன் மரம், பாதிரி மரம் ஆகியவற்றை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்திலும் காணலாம்.