நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 12: தர்ப்பைப் புல் - கேது கிரகம்
டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்

நவக்கிரகங்களில் 9 வது கிரகம் கேது கிரகமாகும். இதற்கு ஆங்கிலத்தில் நெப்டியூன் என்பார்கள். அரபு நாட்டு வானவியல் சாஸ்திரத்திலும், இந்திய வானவியல் சாஸ்திரத்திலும் இந்த கிரகத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கிரகத்துக்கு நிரந்தர இடம் கிடையாது என்பதால் மற்ற 7 கிரகங்களிலும் சிறிது காலம் தங்கியிருந்து சுற்றிக் கொண்டிருக்கும். இக்கிரகம் ஞானம் தருதல், வம்சத்தை விருத்தி செய்தல், மோட்சம் கொடுத்தல், மரணத்தை உண்டாக்குதல் போன்ற பணிகளையும், தீங்குகளையும் ஏற்படுத்தும் குணம் கொண்டது. இதனால் இந்தக் கிரகத்தின் காலத்தை எமகண்ட காலம் என்று சொல்வார்கள். இந்நேரத்தில் எந்த செயல் செய்தாலும் விபத்தோ, மரணமோ ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.கேது கிரகத்தின் தோஷத்தை நீக்குவதற்காகவும், அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளையும், கெடுதல்களையும் நீக்குவதற்காகவும், தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்துவார்கள். தர்ப்பைப் புல் கேது கிரகத்துடன் தொடர்புள்ள பல்வகைத் தாவரமாகும்.இராமபிரானுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும், இரண்டாவது பிள்ளையின் பெயர் குசா எனவும் அவருடைய பெயரைக் குறிக்கும் வகையில் இந்தப் புல்லுக்கு குசா புல் என்று பெயரிடப்பட்டு வடநாட்டு மக்கள் அழைக்கின்றார்கள்.நம்நாட்டில் நவக்கிரகக் கோவில்கள் உள்ளன. அவற்றில் கேது கிரகத்துக்குத் தனியாக ஒரு விக்கிரகம் அமைத்து அதற்கு பூஜை செய்த பின் தர்ப்பைப் புல்லைத் தொட்டு வணங்கும் பழக்கம் இன்றும் கூட இந்து சமுதாய மக்களிடம் காணப்படுகிறது.தர்ப்பைப்புல் கேது கிரகத்தின் கதிர் வீச்சுகளை தன் உடல் முழுவதிலும் நிரப்பிக் கொண்டிருக்கும். அதைத்தான் மருத்துவகுணம் என வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.பொதுவாக கேது கிரகம் மரணத்தை விளைவிக்கக் கூடிய கிரகம் என்று சொல்லப்படுவதால் மரணத்தை உண்டாக்கும் அபாயகரமான நோய்களுக்கு சிகிச்சையளிக்க தர்ப்பைப் புல்லை மூலிகை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றார்கள்.முக்கியமாக சிறுநீரக நோய்கள், சிறுநீரகக் கற்கள், பாம்புக்கடி விஷம், இரத்தம் கலந்த சிறுநீர், சிறுநீர்ப்பைத் தொற்று, புண், இரத்த வாந்தி, காயங்கள், இரத்த மூலம், அளவு கடந்த மாதவிடாய் போக்கு, வெள்ளைப்பாடு போன்ற நோய்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
*தர்ப்பைப் புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
*உடலில் தாய்ப்பாலை அதிக அளவு சுரக்கச் செய்கிறது.
*சிறுநீரை அதிக அளவில் பெருக்கச் செய்கிறது.
*பாம்புக்கடி விஷத்தை அகற்றுகிறது.
*வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை நீக்கிச் சுத்தம் செய்கிறது.
*சிறுநீரகக் கற்களைச் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றுகிறது.
*உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது.
*ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.கேது கிரகம் 12 ராசிகளுக்கும் உரியது. முக்கியமாக மீனம் ராசியுடன் தொடர்பு கொண்டது. அஸ்வினி நட்சத்திரம், மகம் நட்சத்திரம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்களுக்கும் தர்ப்பைப் புல் பயன்தரும் முக்கியத் தாவரமாகத் திகழ்கிறது.கேது கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகள், முக்கியமாக கால் பாதங்களைப் பாதிக்கக் கூடியவை. கேது கிரக நேரத்தில் பிறந்தவர்களுக்கு நிலையான ஒரு குணமில்லாமல் இரண்டு குணங்கள் இருக்கும். அனைவருடனும் பகைத்துக் கொள்ளும் குணம் இருக்கும். இந்தக் கிரகத்தின் தோஷத்தைப் போக்க தர்ப்பைப் புல்லைப் பயன்படுத்தலாம்.தர்ப்பப் புல் வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது.(தொடரும்)
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 11: அருகம்புல் - ராகு கிரகம் டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்
Last Updated :

பெரும்பாலான இந்து சமுதாய மக்கள் வானவியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு நாளின் 24 மணி நேரத்தைப் பிரித்து இதில் மனிதனுக்கு அதிக அளவில் நன்மைதரும் நேரத்தையும், தீமை தரும் நேரத்தையும் தனித் தனியாக அடையாளம் காட்டி அதனைப் பின்பற்றி வருகின்றனர். தினசரி ஒன்றரை மணி நேரம் இராகு காலம் என்றும், ஒன்றரை மணி நேரம் எம கண்டம் என்றும் அதுவும் மிகவும் மோசமான நேரம் என்றும், ஒன்றரை மணி நேரம் குளிகை காலம் என்றும், இது சுமாரான கெட்ட நேரம் என்றும் அடையாளம் காட்டியிருக்கின்றார்கள். தினசரி காலண்டரில் அதன் அட்டவணை நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். அதன்படி பலர், நல்ல நேரத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள். கெட்ட நேரங்களில் நல்ல காரியங்கள் செய்வதைத் தவிர்ப்பார்கள். இந்த மூன்று கெட்ட நேரங்களில் ராகு காலத்தைப் பொதுவாகக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். இராகு என்பது ஒரு கிரகத்தின் பெயராகும். இந்த கிரகத்துக்கு ஆங்கிலத்தில் புளூட்டோ என்பார்கள். இந்த கிரகத்தின் செயல்பாடுகள் ஒன்றரை மணி நேரம் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. அதனால்தான் புளூட்டோ கிரகத்தின் நேரத்துக்கு இராகு காலம் என்பார்கள். இராகு கிரகத்தினால் உண்டாகும் தோஷத்தை நீக்க இந்து சமுதாய மக்கள் நவக்கிரக ஆலயத்துக்கு சென்று இராகு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு, அருகம்புல்லைத் தொட்டு வணங்கிவிட்டு வருவார்கள். அருகம்புல் இராகு கிரகத்துடன் தொடர்பு கொண்ட புல்வகைத் தாவரம் என்று யுனானி, சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. உலகம் தோன்றிய நாள் தொட்டு உயிருடன் வாழும் ஒரே உயிர் அருகம்புல் மட்டுமே என சங்க இலக்கிய நூலான பட்டினப்பாலை கூறுகிறது. உண்மையில் அருகம்புல் இராகு கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் சேகரித்து வைத்துக் கொள்ளும், அதைத் தீர்த்தமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும்போது நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன் இராகு கிரக தோஷத்தையும் நீக்குகிறது என்று யுனானி மற்றும் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆரோக்கியமான மனிதர் ஒருவரின் 2 சிறுநீரகங்களும் சுருங்கிவிட்டது. டயாலிஸிஸ் செய்ய வேண்டும். கிட்னி மாற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறும்போது, எதனால் அந்தச் சிறுநீரகங்கள் சுருங்கிவிட்டன என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காமல் தத்தளிப்பார்கள். இது புளூட்டோ கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளினால் உடல் ஆரோக்கியம் கெட்டு அதனால் சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுகின்றன என்று மூலிகை வானவியல் சாஸ்திரம் கூறுகிறது. எனவே மருத்துவ விஞ்ஞானம் சில நோய்களுக்கான காரணங்களுக்கு இன்னும் விளக்கம் அளிக்காமலேயே உள்ளது. அருகம்புல் முழு செடியும் மருந்தாகப் பயன் அளிக்கிறது. சிறுநீரில் இரத்தம் கசிதல், சிறுநீரகங்களில் கட்டிகள் தோன்றுதல், மேகம், வெட்டை, பால்வினை நோய்கள், எய்ட்ஸ், கிட்னி ஃபெயிலியர், லிவர் ஃபெயிலியர், சிறுநீரகக் கற்கள், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், அக்கி என்னும் தோல் நோய், உள் மூலம், நாக்கு வறட்சி, எரிச்சல் போன்ற நோய்களுக்கு மூலிகை மருத்துவர்கள் அருகம்புல்லைத் தருகின்றனர். அருகம்புல்லையும், மஞ்சளையும் அரைத்து எக்ஸிமா, ரிங்வார்ம், படைகள், வண்டுக்கடி போன்ற தோல் நோய்கள் மீது களிம்பாகப் பூசுவார்கள். பொதுவாக 10 முதல் 20 மில்லி வரை அருகம்புல் சாற்றை மருந்தாக குடிக்கச் செய்வார்கள். அருகம்புல்லை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து பார்த்ததில் நச்சுக் கிருமிகளைக் கொல்லும் மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகம்புல்லை பசையாக்கி, பெண்களுக்கு அடிவயிற்றில் பூசினால் அதிகமான இரத்தப் போக்குக் கழிவது உடனடியாகக் குறைகிறது. அருகம்புல் முழு செடி 200 கிராம், மிளகு 150 கிராம், சீரகம் 100 கிராம் என மூன்றையும் இடித்து 2 லிட்டர் எள் எண்ணெயில் கலந்து 15 நாட்கள் கடும் வெயிலில் வைக்க வேண்டும். 16 வது நாள் வடிகட்டிய எண்ணெயை மட்டும் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினசரி தலையில் பூசி வந்தால் பலதரப்பட்ட கண்நோய்கள் குணம் பெறுகின்றன. யுனானி மருத்துவர்கள் அருகம்புல்லைப் பவுடராக்கி, வேளைக்கு 3 கிராம் சாப்பிடக் கொடுப்பார்கள். சிறுநீரக நோய்களுக்கு லேகியம், ஷர்பத் தயாரித்துக் கொடுப்பார்கள். இதனால் தடைப்பட்ட சிறுநீர் வெளியேறுவதுடன் சிறுநீரகங்களுக்கு வலிமையும் கிடைக்கின்றது. இராகு கிரகம், அடி வயிறு மற்றும் இன விருத்தி உறுப்புகளுடன் தொடர்பு கொண்டது. அக்டோபர் 22 முதல் நவம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும், திருவாதிரை நட்சத்திரம், சுவாதி நட்சத்திரம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் இராகு கிரக தோஷம் நீக்குவதற்கும் சிறந்த பரிகார மருந்து என்று மூலிகை வானவியல் சாஸ்திரம் கூறுகிறது. பஞ்ச பூதங்களில் இராகு கிரகம் நீருடன் தொடர்பு கொண்டது. இந்த கிரக காலத்தில் பிறந்தவர்களுக்கு நிலையான குணம் இருக்காது. பயந்த சுபாவத்துடன் காணப்படுவார்கள். இதைப் போக்க அருகம்புல்லைப் பயன்படுத்தலாம். அருகம்புல்லைப் பொதுவாக எல்லா இடங்களிலும் காணலாம். விசேஷமாக வாணியம்பாடியில் உள்ள முகல் கார்டன் வானவியல் மூலிகைத் தோட்டத்திலும் வளர்த்து வருகிறோம்.
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 8 :
அரச மரம்டாக்டர் ஹகீம் எஸ். அக்பர் கவுஸர்
First Published : 10 May 2009 02:44:36 PM IST
மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வெளியேற்றும். அதனால்தான் கோயில்களின் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரிப்பார்கள். இதேப் போல், பொது இடங்களில் கிராமங்களில் அரச மரத்தை நடுவார்கள்.
அரச மரத்திற்கும்,
வியாழன் (Jupiter)
கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன.
கிரகங்களில் வியாழன் கிரகம் சக்தி வாய்ந்தது.
இது குழந்தை பாக்கியம்,
திருமணம்,
பணம்,
வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வியாழன் கிரகம் மனிதனின் தொடைப் பகுதியை அதிகளவில் பாதிக்கும். வியாழக்கிழமையன்று வியாழன் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது. அதனால்தான் அந்த தினம் வியாழக்கிழமை (Thursday)என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.
தனுசு ராசி, மீனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் அரசன் மரம் உகந்த நன்மை தரும் மரமாகும்.
தோல் நோய்கள், காயங்கள், தீப்புண், அஜீரணம், நடக்கும் போது கால் மடங்கிப் போதல், தொழுநோய், மூட்டுவாதம், இதய பலவீனம், மது மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற நோய்களும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.
இந்து சமுதாய மக்கள் வியாழன் கிரகத்திற்கு "குரு' என்று அழைப்பார்கள். வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும்.
வியாழன் கிரகத்தால் உண்டாகும் நோய்கள், தீமைகளுக்கு வியாழன் தோஷம், குரு தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்க நவக்கிரக ஆலயங்களுக்குச் சென்று குரு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு நூறு முறை சுற்றி வருவது இந்து சமுதாய மக்களின் ஐதீகம்.
உண்மையில், அரச மரம் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு அடைத்து பாதுகாத்துக் கொளளும். அதுதான் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகததிலும் மருத்துவ குணமாக மாறுகிறது.
மருத்துவ குணங்கள்
இலைகள்: இளம் துளிர்களை பாலில் அல்லது தண்ணீரில் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மூளைக்கு பலம் கிடைக்கும்.
இதன் இலைகளை நிழலில் உலர வைத்து, பவுடராக்கி, கருவேலம் பிசின் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி ஒரு மாத்திரையை சுவைத்துச் சாப்பிட்டால் இருமல் குணம் பெறும்.
ஏழு முதிர்ந்த இலைகளை எரித்து, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.
மரப்பட்டை: இம்மரத்தின் பட்டையையும், இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் நீங்குவதுடன், இரத்தம் சுத்தமாகும்.
பட்டைச்சாறு: இம்மரத்தின் பட்டைச்சாறு மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.
பழம்: இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் "அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.
"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது.
(தொடரும்)
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 9: அத்திமரம்
டாக்டர் ஹகீம் எஸ்.அக்பர் கவுஸர்
Last Updated :

மரங்களில் திருக்குர் ஆன், பைபிள், வேதங்கள் ஆகிய மூன்றிலும் இடம் பெற்ற ஒரே மரம் அத்தியாகும். இந்த மரம் வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.இந்த கிரகத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகள் அதிக அளவில் வெளியேறுகிறது. அதனால்தான், வெள்ளி கிரகத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிறந்தது. இந்த நாள் அன்று முஸ்லீம்கள் விசேஷ தொழுகை நடத்துவார்கள். கிறிஸ்தவர்களுக்கு குட் ஃபிரைடே என்கிற புனித வெள்ளிக்கிழமை விரதம் இருந்து விசேஷ பூஜைகளும் செய்வார்கள்.இந்தக் கிரகம் மனித உடலில் கழுத்து பாகத்தை மிகவும் பாதிக்கச் செய்கிறது. மலச்சிக்கல், வீக்கம், சிறுநீரகக் கோளாறுகள், குடல்புழுக்கள், வெள்ளி கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால்தான் உருவாகின்றன. மனிதனுக்குப் பல வகையான நோய்கள் ஏற்படும் போது கிராம மக்கள் அவற்றில் சிலவற்றை வெள்ளி தோஷம் என்பார்கள். அதாவது வெள்ளி கிரகத்தின் தீய கதிர்வீச்சுளால் ஏற்பட்ட நோய்கள் என்று பொருள் கூறுவர்.அதற்காக இந்து சமுதாய மக்கள் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வெள்ளி கிரக விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகிலுள்ள அத்தி மரத்தையும் தொட்டு வணங்கிவிட்டு வெள்ளி கிரகத் தோஷத்தைக் கழிப்பார்கள். வெள்ளி கிரகத்தைச் சுக்கிர பகவான் என்றும் அழைக்கின்றனர்.யுனானி மருத்துவர்கள் வெள்ளி கிரக தோஷத்தை நீக்குவதற்காக அத்தி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். அத்தி மரத்தின் அடியில் அமரச் செய்வார்கள்.அரை மணிநேரம் அத்தி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். இதனால் வெள்ளி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நமது உடலில் சென்று நல்ல உடல் நலனைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது.அத்தி மரம் வெள்ளி கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக் கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.
மருத்துவ குணம்;அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.
இலை:அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.
பட்டை:அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.
பழம்:நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.இம்மரத்தை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.(தொடரும்)