உங்கள் சிகிச்சை, உங்கள் கையில்!
By
-சாருகேசி
சென்னை அடையாறு
வி.ஹெச்.எஸ்.மருத்துவமனையின் டேக்-வி.ஹெச்.எஸ். டயாபடிக் மையத்தில் புகழ்
பெற்ற மருத்துவர் டாக்டர் சி.வி. கிருஷ்ணசாமி, சீனாவிலிருந்து
வந்திருக்கும் ஹோங்க்சி ஸியோவை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
""இவர் முதலீட்டுத் துறையில் அனுபவமுள்ள முன்னாள் வங்கி
அதிகாரி. எம்.பி.ஏ. பட்டதாரி. ஒரு நாவலும் எழுதி சீன சமுதாயத்தினரிடையே
விற்பனையில் அது சக்கைப் போடு போடுகிறது. இப்போது ஸியோ இங்கே வந்திருப்பது
மாற்று மருத்துவம் பற்றியும் அதன் பலனையும் எடுத்துச் சொல்லி
அறிமுகப்படுத்தத்தான்'' என்றார். முன்பே இரு முறை சென்னைக்கு
வந்திருக்கிறாராம் ஸியோ. சீனாவின் ஹூபே மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அந்தப் பகுதி முழுக்க மலைப் பிரதேசமாம். அங்கே பாரம்பரிய சீன சிகிச்சை முறைகளைக் கையாளுபவர்கள் நிறைய இருக்கிறார்கள் .
நாம் ஸியோவைச் சந்திக்கும்போது அவருடன் பயிற்சிகளைச்
செய்து காண்பிக்க பிங், எல்லென் மற்றும் டோங்லி என மூன்று சீன
உதவியாளர்களும் இருந்தார்கள். அவருடன் பேசும் முன்பு ஹாங்காங்கிலிருந்து
மும்பைக்குக் குடிபெயர்ந்துவிட்ட மராத்தி பிஸினஸ்மேன் என்று தம்மை
அறிமுகப்படுத்திக்கொண்டார் பராக் சாமெல்.
""எனக்கு ஹாங்காங்கில் பல கப்பல்களை மேற்பார்வையிட
வேண்டிய பணி. ஒரு நாள் வலது கண்ணில் ரெடினாவுக்கு ரத்தம் கொண்டு செல்லும்
ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு, கண் முழுக்கச் சிவந்து ரத்தம் கொட்டத்
தொடங்கியது. என்னவெல்லாமோ வைத்தியம் செய்து பார்த்தேன். 12 வருடங்கள்
பாதிப் பார்வையுடன் கஷ்டப்பட்டேன். ஒரு நாள் ஸியோவின் அறிமுகம்
கிடைத்தது. அவர் பைதா-லாஜின் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி என் கண்ணைக்
குணப்படுத்திவிட்டார். க்ரேனியல் நரம்புதான் பார்வைக்கு உதவுகிறது
என்றார். அதுதான் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார். மாய வித்தை போல்
இருந்தது. அவரிடம் அந்த சிகிச்சை முறையைக் கற்றுக்கொண்டேன். அதிலிருந்து
நான் மும்பைக்குக் குடி பெயர்ந்து பைதா-லாஜின் ஆலோசகராகவும்,
பயிற்சியாளராகவும் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்துகிறேன்'' என்றபோது ஸியோ
மெல்லப் புன்னகை புந்தார்.
""இதோ பாருங்கள், என் சொந்த அனுபவம்தான் என்னை இந்தச்
சிகிச்சைக்கு மாற்றியது. தாயார் இதய நோயாளி. அதிக ரத்த அழுத்தக்காரர்.
சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளானவர். அவரே 30 வருடங்களாக ஆங்கில மருத்துவம்
செய்யும் மருத்துவர். அம்மா, நீயே ஒரு டாக்டர். உனக்கு இத்தனை நோய்கள்
இருக்கையில் நீயே உன்னைக் குணப்படுத்திக் கொள்ள முடியாதா என்று கேட்டேன்.
அம்மா மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு பைதா-லாஜின் முறையில் சிகிச்சை
ஆரம்பித்தேன். முழுதும் குணமாகி மகிழ்ச்சி அடைந்தார்'' என்றார் ஹோங்க்சி
ஸியோ.
இன்னொரு பெண்மணியின் கதையைக் கேளுங்கள். பக்கவாதம்
வந்தோடு மட்டுமல்ல. நடக்க முடியாது. நினைவு இழந்து படுத்திருந்தார்.
கண்கள் இரண்டும் ரத்தம்
சேர்ந்த மாதிரி சிவந்து இருந்தன. நான் அவரைப் பார்த்து
பைதா-லாஜின் (Paida lajin) முறையைக் கையாண்ட போது, 15 நிமிடத்தில் விழித்துக் கொண்டார்
அப்புறம் ஏழே நாள்தான் சிகிச்சை கொடுத்தேன். வீட்டுக்கு நடந்தே
போய்விட்டார்'' என்றார் ஸியோ. பைதா-லாஜின் சிகிச்சை முறை என்றால் என்ன?
![]()
""ஸ்லாப்பிங் அன்ட் ஸ்ட்ரெச்சிங் - அதாவது அடித்தல் மற்றும் நீட்டல் (அடித்தல் என்றால் தட்டுதல், ஓங்கித் தட்டுதல்)
நம் உடம்பில் இதயம் துடிப்பதை மட்டும்தான் நாம்
அறிகிறோம். உடம்பின் முக்கியமான பகுதிகள் அத்தனையும் துடிக்கும். அந்தத்
துடிப்பை, வைப்ரேஷனை நாம் கேட்க முடியும். அந்த ஓசைகள் எல்லாம்
ஒத்திசைந்து செயல்படும்போது உடல் சீராக இருக்கிறது. ஒரு பகுதி சரியாக
இயங்கவில்லை என்றாலும் நோய் தாக்குகிறது. அதனால் மருந்துகள் சாப்பிடச்
சொல்கிறார் மருத்துவர். மருந்துகள் எல்லாம் கெமிக்கல்கள். அதாவது
ரசாயனங்கள். விஷங்கள். பக்கவிளைவுகள் ஏற்படுத்துபவை. உடலுக்கு வெளியே
இருந்து எதையும் உடலுக்குள் செலுத்தாதீர்கள். அக்குபங்க்சர், அக்குபிரஷர்,
டாய்-சி, யோகா இவற்றைக் கொண்டே உங்கள் உடலின் சகல நோய்களையும் சீராக்க
முடியும்'' என்கிறார் ஸியோ. மூலிகை மருந்துகள் உபயோகிப்பதை இவர்
ஆதரிக்கிறார். சீன மருத்துவத்தைப் பொறுத்தவரை, சீன மருத்துவ நூல் யெல்லோ
எம்பரர்ஸ் கானன் ஆப் இன்டர்னல் மெடிசின் அவர்களுக்கு பைபிள் மாதிரி.
""பொருளாதாரம் படித்து, எம்பிஏ வாங்கிவிட்டு, வங்கியில்
இன்வெஸ்ட்மென்ட் பாங்கராகச் இருந்து சம்பாதித்துவிட்டு, வாழ்க்கையை நான்
அனுபவிக்கவில்லை என்றால் அப்புறம் வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது.
சீன கலாசாரம் பற்றி யோசித்தேன். பீஜிங்கில் ஒலிம்பிக்ஸ் நடக்கும் முன்பு
சீன பாரம்பரியம், கலாசாரம் பற்றி தொடக்க விழாவில் என் குழு ஓர் அறிமுகம்
செய்தது. ஒலிம்பிக்ஸின்போது இதை உலகம் முழுக்க வியந்து பார்த்த போது அதன்
தாக்கத்தை உணர்ந்தேன். அப்போதுதான் சீன மருத்துவத்தின் தலைசிறந்த
மருத்துவர்களை நான் சந்திக்க முடிந்தது. அவர்களிடமிருந்து அக்குபஞ்சர்,
அக்குபிரஷர், போன் செட்டிங், ஊசியின்-கத்தியின் நுட்பம், பைதா-லாஜின் முறை
எல்லாம் கற்றுக்கொண்டேன். நாம்தான் நம் ஆரோக்கியத்தின் எசமானர்கள்''
என்கிறார் ஸியோ.
இவர் முதலில் எழுதிய நூல் "ஜர்னி டு க்யூர்' - மற்றும்
"பைதா-லாஜின் ஸ்லாப் ஹீலிங்'. இவர் இப்போது உலகம் முழுக்கச் சொற்பொழிவுகள்
செய்யக் கிளம்பிவிட்டார்.
சந்தேக பிராணிகளிடமும், சவால்காரர்களிடமும் இவர்
கேட்கும் முதல் கேள்வி: ""நீங்கள் பைதா-லாஜின் உங்கள் அளவில் பயிற்சி
செய்து பார்த்திருக்கிறீர்களா? செய்து பார்த்துவிட்டுத் தோற்றுப் போனால்
வந்து சொல்லுங்கள்'' என்பது இவர் வேண்டுகோள். பைதா முறையை ஒரு தாவோ
சன்னியாசியிடமிருந்தும், லாஜின் முறையை ஒரு
சீன-மருத்துவ நிபுணரிடமிருந்தும் கற்றுக்கொண்டாராம்.
இவர் அகுபங்க்சர் கற்றுக்கொண்டது ஒரு என்ஜினீயரிடமிருந்து. அக்குபிரஷரை
ஒரு மீனவரிடமிருந்து கற்றுக் கொண்டாராம் கை, முழங்கை, முழங்கால் மற்றும்
பாதம் இவைதான் நம் உடம்பில் முக்கியமான இணைப்புகள். அடைப்புகள் இருந்தால்
இந்த இடங்களில் ஒரு தட்டுத் தட்டினால் போதும் வலி போய்விடும். நிறைய
அடைப்புகள் இருந்தால் நிறைய தடவை தட்ட வேண்டும். (பிறத்தியாரை
அடித்தால்தான் திரும்ப அடி வாங்க வேண்டும்.
நோய் குணமாகுமென்றால் நம்மை நாமே அடித்துக் கொண்டால்
என்ன தப்பு) எந்தப் பக்க விளைவுகளும் கிடையாது. உடல் பருமனைக்கூட
பைதா-லாஜின் முறையில் குணப்படுத்த முடியும் என்கிறார் ஸியோ. டயபடீஸ்,
முழங்கால் வலி, இடுப்பு-முதுகு வலி எதையும் தம்மால் பைதா-லாஜின் முறையில்
குணமாக்க முடியும் என்கிறார்.
நம்மைக் குணப்படுத்த வெளியேயிருந்து ஆட்கள் வரத்
தேவையில்லை என்பது இவர் வாதம். நவீன மருத்துவத்தை விட இந்த இயற்கை
மருத்துவம் எத்தனையோ சக்தி வாய்ந்தது என்கிறார்.
45 வயதான ஒரு பெண்மணி படுத்த படுக்கையாக இருந்தாராம்.
நாள் பூரா ஒரே அழுகைதான். 14 ஸ்ட்ரெச்சஸ் பயிற்சிகள், 15 ஸ்லாப்-கள்
அதாவது அடிகள்! எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டாராம். 85 சதவிகித குணம்
கிடைத்ததாம். ஒவ்வொரு நோயையும் அதைத் தாம் குணப்படுத்திய முறையையும் ஸியோ
விவரிக்கும் முறை சுவாரசியமானது.
பேட்டி முடிந்து வெளியே வந்ததும், டாக்டர் சி.வி. கிருஷ்ணசாமி கூறினார்.
"" ஸியோ மகாத்மா காந்தி மீது மிகுந்த மரியாதை
வைத்திருக்கிறார். அவரே அதைச் சொன்னார். அப்புறம் அவர் கடைப்பிடித்த
உண்ணாவிரதக் கொள்கையை வெகுவாக ஆதரிக்கிறார். அது உடலை நலமாக வைத்திருக்க
உதவுகிறது என்கிறார்'' டாக்டர் சி.வி.கே. மணிபால் மருத்துவப் பல்கலைக்கழக
முன்னாள் துணைவேந்தரும், மாற்று மருத்துவ ஆர்வலருமான டாக்டர் பி.எம்.
ஹெக்டே ஸியோவின் ஆதரவாளர்.
நன்றி தினமணி 22.03.15
| |
Sunday, March 22, 2015
உங்கள் சிகிச்சை, உங்கள் கையில்!
Subscribe to:
Posts (Atom)