Saturday, April 25, 2009

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

30.11.2008.pdf
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சூடு தணிய...
First Published : 26 Apr 2009


எனக்கு வயது 22. எடை 48 கிலோ. எனக்கு உடல் சூடு அதிகமாக இருக்கிறது. எந்த அளவுக்கு என்றால் நான் பாயை விரித்துப் படுத்து உறங்கி எழுந்ததும், படுத்திருந்த இடத்தில் ஐந்து நிமிடம் வரை சூடாக இருக்கிறது. இதனால் உடல் முழுக்க பருக்கள், கட்டி, உதடு வெடிப்பு, கண் எரிச்சல், உடல் சோர்வு, எடைகுறைவு, வலுவின்மை ஆகியவற்றால் அவதிப்படுகிறேன். இவை குணமாக நான் என்ன செய்ய வேண்டும்?ஹாரீஸ், திருவைகுண்டம். ""பித்தே திக்த: தத:ஸ்வாது: கஷாயஸ்சரúஸôஹித'' என்று ஆயுர்வேதம் கூறும் பித்த தோஷங்களின் குணங்களாகிய சிறிது எண்ணெய்ப் பசை, ஊடுருவும் தன்மை, சூடு, லேசானது, துர்நாற்றம், மலத்தை இளக்கும் தன்மை, திரவம் போன்றவை உடலில் அதிகரிக்கும்போது, சுவைகளில் முக்கியமாக கசப்பும், அதற்கு அடுத்தபடியாக இனிப்பும், மூன்றாவதாக துவர்ப்புச் சுவையும் நிறைந்த மருந்துகளாலும், உணவு வகைகளாலும் அந்தக் குணங்களின் சீற்றத்தை அடக்க வேண்டும் என்று அதற்கு அர்த்தமாகும். மற்ற மூன்று சுவைகளாகிய காரம், புளி மற்றும் உவர்ப்பு ஆகியவற்றை மருந்தாகவோ, உணவாகவோ சாப்பிடக்கூடாது என்ற ஓர் உள்முக அர்த்தமும் இந்த ஸ்லோகத்தில் மறைந்திருக்கிறது. பித்ததோஷத்தின் சீற்றத்தை அடக்குவதைவிட குடலிலிருந்து பேதி மருந்து மூலமாக வெளியேற்றுவது எனும் சிகிச்சைமுறை சிறந்தது. அதற்குக் காரணம், மேற்குறிப்பிட்ட சுவைகளின் மூலம் தோஷத்தின் சீற்றம் அடங்கினாலும், ஒரு சிறிய காரணம் கொண்டு அந்தப் பித்தம் மறுபடியும் அதிகமாகலாம். பித்தத்தை வெளியேற்றிவிட்டால் அது மறுபடியும் சீற்றமாவதற்கு வழியில்லை. ஆனால் பேதி மருந்தைச் சாப்பிடுவதற்கு நோயாளிக்கு உடலில் வலுவிருக்க வேண்டும். உங்களுக்கு வயது 22 தான் ஆகிறது. இந்த இளமையான வயதில் உங்களுக்கு நல்ல உடல் வலுவிருக்க வேண்டும். ஆனால் வலுவின்மை இருப்பதாகக் குறிப்பிடுகிறீர்கள். தமிழகத்தில் கடும் கோடை வேறு தொடங்கிவிட்டது. அதனால் நீங்கள் பேதி மருந்து சாப்பிட்டு, பித்தத்தை வெளியேற்றி அதன் மூலம் உடல் சூட்டைத் தணிக்க முயற்சி மேற்கொள்வதைவிட, உடல் ஏற்படுத்தியிருக்கும் பித்தத்தை அடக்குவதே நல்லதாகும். அந்த வகையில் கீழ்காணும் சில உணவுகளைச் சாப்பிட முயற்சி செய்யவும். முதல்நாள் இரவு மாக்கல்லால் செய்யப்பட்ட கல்சட்டியில் ஊறிய சாதத்தின் தண்ணீரை, சிட்டிகை நெல்லிக்காய் வத்தல் பொடியுடனும், தனியாத் தூளுடனும், சிறிது இந்துப்பு கலந்து 2 - 3 கிளாஸ் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். ருசிக்காக சிறிது வெங்காயத்தைக் கடித்துக் கொள்ளலாம். இதைக் காலை உணவாக ஏற்க, குடலில் ஊறும் பித்த ஊறலை மட்டுப்படுத்தி, உடல் பலவீனத்தை ஏற்படுத்தாமல் சுகமான கழிச்சலை ஏற்படுத்தும். கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், சிறுகுடல் ஆகிய பகுதிகள் இந்த எளிமையான உணவால், துடைத்துவிட்ட கண்ணாடிப் பாத்திரம்போல் தூய்மையாகிவிடுகின்றன. காலையில் 9 மணிக்கு, பசும்பால் கலந்த அன்னத்தை சிறிது கற்கண்டு பொடித்துச் சேர்த்துச் சாப்பிடவும். பித்த ஊறலை, தனது இனிப்புச் சுவை மற்றும் குளிர்ச்சி எனும் குணத்தால் பசும்பால் கட்டுப்படுத்துகிறது. மதிய உணவாகப் பச்சரிசி சாதத்துடன் மணத்தக்காளிக் கீரைப் பொரியல், வாழைப்பூ வடைகறி, நெல்லிக்காய்த் தயிர்ப்பச்சடி, கேரட் உசிலி, பயத்தம்பருப்பு தூக்கலாக, பசுநெய் சேர்த்து சாப்பிட்டு, தக்காளி ரசம் அல்லது வேப்பம்பூ ரசம், நன்றாக வேக வைத்துச் சீரகம், தேங்காய் சேர்த்து அரைத்த முட்டைக்கோஸ் கூட்டு, பூசணிக்காய் கூட்டு போன்றவற்றை உணவின் நடுவிலும், நன்றாகக் கடைந்த வெண்ணெய் நீக்காத மோர்சாதத்துடன் நார்த்தங்காய் பச்சடியும் சாப்பிடலாம். மாலையில் ஒரு பூவன் வாழைப்பழமும், சிறிது இனிப்பு மாதுளம்பழமும் சாப்பிடலாம். இரவில் பச்சைப் பயறு பெசரேட் தோசை அல்லது சீரகம் சேர்த்த கோதுமையினால் தயாரிக்கப்பட்ட தோசை, சிறிது தேங்காய்ச் சட்டினியுடன் சாப்பிட நல்லது. புலால் உணவு, சமோசா, பீட்ஸô, பிரட் போன்ற துரித உணவு வகைகள், பகல் தூக்கம், மன உளைச்சல் தரும் சிந்தனை, தேவையற்ற கோபம், இரவில் கண்விழித்தல், காபி, டீ, சிகரெட், மதுபானம், பாக்கு போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை. உடல்சூடு தணிய ஆயுர்வேத மருந்தாகிய திராக்ஷôதி கஷாயத்தை 15 மி.லி. அளவில் எடுத்து, 60 மி.லி. கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும். சந்தனாதி தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம்.

நன்றி தினமணி கதிர்



மனித உடல் ரகசியம்

உடல்-மனம்-இந்திரியங்கள்-ஜீவாத்மா ஆகியவற்றின் சேர்க்கை முன் ஜன்மத்தின் கர்ம வாசனைகளால் தகுந்த கருக்குழியை தேர்ந்தெடுத்து மனித உடலாக உருப்பெற்று வளர்கிறது. முன் ஜன்மத்தின் கர்ம வினைகள் சிறப்பாக இருக்குமேயானால் நல்ல ஆசால சீலங்களையும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த ஒரு குடும்பத்தில் சூக்ஷ்ம சரீர வடிவத்தில் இருந்த ஜீவாத்மா மனித உடலை எடுத்துக் கொண்டு அக்குடும்பத்தில் பிறக்கிறது. எது சிறப்பான கர்மவினை என்று நாம் ஆராய்ந்து பார்த்தால் மனதின் சத்வகுணத்தை அதிகப்படுத்தும் உணவு வகைகளான பால், வெண்ணெய், நெய், தயிர், மோர், இனிப்புப் பண்டம் எளிதில் ஜீர்ணமாகக் கூடிய கறிகாய் வகைகள், அவைகளை சரியான நேரத்தில் உண்பது, செயல்களை செய்வதில் ஆலோசனைக்குப் பிறகே செய்தல், பொருள் பற்று இல்லாதிருத்தல், தானம், சமநோக்கு, உண்மையே பேசுதல், பொறுமை, சான்றோருக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களுடனிருத்தல், சதா ஈஸ்வர பக்தி, உயர் சிந்தனைகள் போன்றவை கர்மவினைகள் சிறப்பாக அமையும்படி செய்யும் ஒரு சில உதாரணங்கள். ஜீவாத்மாவின் உடல் பிரவேசம் கண்களுக்குப் புலப்படாதிருக்கிறது. உடலின் அமைப்பையும் குழந்தையின் மன நிலையும் சிறப்பாக அமைவதற்கு தாய் தந்தையரின் ஆரோக்யமான முட்டையும் விந்துவும் காரணமாக அமைகின்றன. கருவுற்ற நிலையில் தாயாரின் உணவுப் பழக்கங்களும் நடவடிக்கைகளும் மனதில் எழும் எண்ணங்களின் வெளிப்பாடும் தூய்மையாக அமையும் பக்ஷத்தில் குழந்தையும் உடல் ஆரோக்யத்தையும் உயர் சிந்தனைகளை கொண்டதாகவும் ஜனனம் பெறுகிறது.

கர்மவினை எதுவாயினும், உயர்குடிப்பிறப்பாயினும் மனித உடலில் வாதம்-பித்தம்-கபம் எனும் மூன்று தோஷங்கள் மட்டுமே உடல் அமைப்பை தீர்மானம் செய்கின்றன. இம்மூன்று தோஷங்களின் ஏதேனும் இரண்டு அதிக அளவில் சேர்ந்தால் வாத கபம், பித்த கபம், வாத பித்தம் என்று மூன்று வகையில் உடல் அமைப்பில் மாறுதல்களைக் காணலாம். வெறும் வாதத்தை மட்டும் அதிகமாகக் கொண்டு பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்யம் மிகக் குறைவாகவும், பித்தம் மட்டும் அதிகமானால் மத்யம நிலையில் ஆரோக்யமும், கபத்தை மட்டும் அதிக அளவில் பெற்றும் வரும் குழந்தை உத்தம ஆரோக்யமாகவும் அமையும். இவை அனைத்தையும் விட சமமான நிலையில் மூன்று தோஷங்களையும் கொண்ட உடலுக்குத்தான் தீர்க்க ஆயுஸும் ஆரோக்யமும் அமையும். இரண்டு தோஷங்களின் சேர்க்கை நிந்திக்கக்கூடியது அதாவது நல்லதல்ல என்பது ஆயுர்வேத அறிஞர்களின் கூற்று. இம்மூன்று தோஷங்களின் அதிக அளவு, குறைந்த அளவில் சேர்க்கை போன்றவற்றை கருவுற்றிருக்கும் பெண்ணின் உணவும், செயல்களும் தீர்மானிக்கின்றன. இதில் தந்தையின் பங்கு விந்தவின் சேர்க்கையில் நிர்ணயம் செய்கிறது.

வறட்சி, லேசானது, குளிர்ச்சி போன்ற தன்மைகளையுடைய வாயுதஷம், அளவில் மிகக் குறைந்த உணவு, ஆயாஸம், மாலை நேரம், காமம், சோகம், பயம், சிந்தை, இரவில் தூக்கமின்மை, அடிபடுதல், நீந்துதல், உணவு ஜீர்ணமான பிறகும் சீற்ற்தை அடைகின்றது. காரம், புளிப்பு, உப்புச் சுவை, சூடான பூமி, பசி தாகம் அடக்குதல், நடுப்பகல், உணவு ஜீர்ணமாகும் தருவாயிலும் பித்தம் சீற்றமாகின்றது.

இனிப்பு, நெய்ப்புத்தன்மை, குளிர்ச்சியான உணவு, பகல்தூக்கம், பசி மந்தித்தல், காலை நேரம், உடல் உழைப்பின்றி ஸுகமாயிருப்பது, உணவு சாப்பிட்டவுடனும் கப தோஷம் அதிகரிக்கின்றது.

மேற்கூறிய காரணங்களை சரியாக உணர்ந்து செயல்பட்டு தாயானவள் குழந்தையின் ஆரோக்யத்தில் பற்றுக் கொண்டவளாக இருத்தல் வேண்டும்.

இம்மூன்று தோஷங்களும் உடலின் அனைத்து பகுதிகளில் பரவியிருந்தாலும் கூட வாயு தோஷத்தின் ஆதிக்கம் தொப்புள் பகுதியின் கீழ்ப் பகுதி முதல் கால் அடிப்பகுதி வரையில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. வாயுவின் சீற்றத்தினால் தான் இடுப்பு, மூட்டுவலி, கணுக்கால் வலி போன்றவை ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் வாயுவின் சீற்றம் ஏற்படாதவாறு பாதுகாக்கலாம்.

பித்தம் தன் ஆதிக்கத்தை இதயப் பகுதி முதல் தொப்புள் வரை வைத்திருப்தால் இரைப்பையில் உணவை ஜெரிப்பதற்கான வழி சுலபமாக உள்ளது. பித்தத்தின் ஆதிக்கப் பகுதிகளில் தான் கல்லீரல், மண்ணீரல், டியோடினம் மற்றும் பேன்கிரியாஸ் போன்ற முக்ய உறுப்புகள் இடம் பெறுகின்றன.

கபம் இதயத்திற்கு மேல் பகுதியிலிருந்து தலை வரை ஆதிக்கம் செலுத்துகிறது. உடலை பலப்படுத்தி நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இம்மூன்று தோஷங்களின் சமமான அளவை எவர் ஒருவர் சிறந்த உணவால், செயலால் பெறுகிறாரோ அவரே ஆரோக்யமானவர். அறுசுவை உணவில் சுவையே தோஷங்களின் ஏற்றக் குறைச்சலை செய்கின்றன.

1. இனிப்பு, புளிப்பு உப்புச் சுவை - வாதத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.

2. காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை - கபத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.

3. துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை - பித்தத்தின் சீற்றத்தைக் குறைக்கின்றன.

4. இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை - கபத்தை அதிகரிக்கும்

5. காரம், கசப்பு துவர்ப்புச் சுவை - வாதத்தை அதிகரிக்கும்

6. புளிப்பு, காரம், உப்புச் சுவை - பித்தத்தை அதிகரிக்கும்

ஆக அறுசுவை உணவு வகைகளையும் சரியான அளவில் உணவில் சேர்ப்பவருக்குத்தான் ஆரோக்யம் புலப்படும்.



ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பழுதான சிறுநீரகமா? பயம் வேண்டாம்!
First Published : 19 Apr 2009

முற்றிலும் செயலிழந்து போய், டயலிஸஸ் செய்து கொண்டும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஏராளமான நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் முழு ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறும் வகையில் சிறுநீரகங்கள் மீண்டும் தங்கள் இயக்கத்தைத் தொடங்குமாறு செய்ய முடியுமா?

எஸ்.அனந்தராமன்,
சென்னை - 40.


சிறு நீரை வெளியேற்ற வேண்டிய சிறுநீரகங்கள் தம் செயல்திறனை இழந்துள்ள நிலையில், பின் முதுகின் மேற்புறத்திலிருந்து கீழ் இடுப்பு வரை, வாயுவைக் கண்டிக்கும் மூலிகைகளைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட தைலத்தால் வெதுவெதுப்பாக நீவிவிட்டு, அதன்பிறகு தொப்புளுக்குக் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீர்ப்பையின் மேற்புறத்திலும் தைலத்தைத் தடவி, ஒரு பெட்டியினுள் நோயாளியை தலை மட்டும் வெளியே தெரியும் வகையில் அமர்த்தி, பெட்டியினுள் மூலிகை இலைகளால் வரும் நீராவியை பரவச் செய்வதன்மூலம் உடலிலிருந்து வியர்வை பெருகும்.
தைலம் உட்புற நெய்ப்பையும், வியர்வை உட்புற மிருதுவையும் ஏற்படுத்துவதால், சிறுநீரகங்களின் உள்ளே பெரிய மற்றும் சிறிய கிளைகளாகப் படர்ந்து விரிந்துள்ள ரத்தக் குழாய்களில் ரப்பர் போன்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. விரிந்து சுருங்கும் தன்மையை இந்தக் குழாய்கள் அடைந்துவிட்டால் சிறுநீரகங்களின் மந்தமான செயல்பாடு நீங்கி, அவை மறுபடியும் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. ரத்த அழுத்தம் சிறுநீரகங்களின் உள்ளே சரியாகிவிட்டால், சிறுநீரைப் பிரித்து எடுக்கும் வேலை அவற்றிற்கு எளிதாகிவிடும்.
சிறுநீர்த்தடை உள்ளவர்கள், அதிலும் முக்கியமாக டயலிஸஸ் செய்து கொள்பவர்கள் தண்ணீரை அதிகம் அருந்தக் கூடாது என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தத் தண்ணீரையே ஒரு மூலிகைத் தண்ணீராக்கிப் பருகினால் சிறுநீரகங்களின் திசுக்கள் வலுப்பட வாய்ப்பிருக்கிறது. உடலில் தேவையற்ற நீர்த்தேக்கத்தையும் தவிர்க்கலாம். தர்ப்பை வேர், கரும்புவேர், வெள்ளரி விதை, நெருஞ்சில் விதை, நீர்முள்ளி ஆகியவற்றை வகைக்கு 3 கிராம் வீதம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரை லிட்டராகக் குறுக்கி, வடிகட்டி, மண்பானையில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த மூலிகைத் தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தக்க இடைவெளிவிட்டு ஒரே நாளில் பருகிவர, சிறுநீரகங்களின் உள்ளே சென்று எளிதாக வடிகட்டிகளைத் தூண்டச் செய்யும்.
நோயாளிகளின் கிரியாட்டின் மற்றும் யூரியா ஆகியவற்றின் அளவு, ரத்தத்தில் இரும்புச் சத்து, பாஸ்பரஸ் அளவு போன்றவை அடிக்கடி கண்காணிக்கப்பட வேண்டியவை. சிறுநீரக செயல்பாடு மேம்பட்டுவிட்டால் இவை அனைத்தும் சாதாரணநிலைக்குத் திரும்பிவிடும். டயலிஸஸ் மூலம் வலுக்கட்டாயமாக ரத்தத்திலிருந்து நீரைப் பிரித்து எடுத்து வெளியேற்றுவதால், சிறுநீரகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. அதுவே அவற்றிற்கு மந்தமான நிலையைத் தந்துவிடுகின்றன.
சிறுநீர்த்தடை நீங்க உணவுக்கு முன்பாகவும், உணவு செரித்த பின்னரும் பருகப்படும் நெய் உதவுகிறது. சாதாரண நெய்யைக் காட்டிலும் வஸ்த்யாமயாந்தககிருதம் எனும் நெய் மருந்து சாப்பிட உகந்தது. 10 மி.லி. நெய்யை உருக்கி காலை உணவிற்கு முன்பாக ஒரு தரம் சாப்பிட்டு, உண்ட காலை உணவு செரித்த பிறகு, இதே நெய் மருந்தை மறுபடியும் உருக்கி, 20 மி.லி. அளவு சாப்பிட வேண்டும். இந்த நெய் மருந்து செரித்த பிறகே அடுத்த உணவைச் சாப்பிட வேண்டும். வஸ்தி என்றால் சிறுநீர்ப்பை. ஆமயம் என்றால் நோய். அந்தகம் என்றால் இல்லாமல் செய்துவிடுதல். அதாவது சிறுநீரகக் கோளாறுகளை இந்த நெய் நீக்குவதால் அதற்கு வஸ்த்யாமாயாந்தககிருதம் என்று பெயர். கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலைக் கடைகளில் இந்த மருந்து விற்கப்படுகிறது.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மனதை அமைதிப்படுத்தும் மருந்துகள்!

ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் கர்ப்பமாக இருந்தேன். கருப்பையில் கட்டி இருந்ததால் வேறு வழியின்றி ஆபரேஷன் மூலம் கருவுடன் சேர்த்து கர்ப்பப்பை அகற்றப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களில் 10 கிலோ எடை கூடியுள்ளது. கால் முட்டி வீங்கி மிகவும் வலி உள்ளது. பொறுமையின்மை, அவசர புத்தி, கோபம் அதிகமானால் கையில் கிடைக்கும் பொருளைத் தூக்கி எறிதல், பிரச்னைகளைத் தாங்கும் மனவலிமை இல்லை. என்னை ஹிஸ்டீரியா நோயாளி என்கிறார்கள். இவற்றிலிருந்து நான் விடுபட என்ன செய்வது?எம்.சத்தியப்பிரியா, திருப்பூர்.

உங்களுடைய நீண்ட கடிதத்தில் உங்கள் வயது 35 என்றும், ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். சிறுவயதிலேயே கருப்பை நீக்கமும், அடுத்ததாக ஓர் ஆண் வாரிசை நீங்கள் எதிர்பார்த்திருந்து அது கிடைக்காமற் போன ஏமாற்றத்தாலும், இனி கருவைச் சுமக்க இயலாது என்ற மனவருத்தமும் சேர்ந்து உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நன்றாகத் தெளிவாகிறது. உறவினர்களிடம் இருந்தும் மன வருத்தம் ஏற்படும்படியாகப் பேச்சுகளை இவ்விஷயத்தில் நீங்கள் கேட்டிருந்தாலும், ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையும் அவர்களைப் பார்த்தால் வெறுப்பும் ஒதுங்கிக் கொள்ளும் மனப்பான்மையும் தங்களுக்கு நேர்ந்திருந்தால் மனம் மேலும் மேலும் பலவீனமடைந்து நீங்கள் குறிப்பிடும் மன உபாதைகள் அனைத்தும் தோன்றக் கூடும்.இறைவன் உங்களுக்கு ஓர் அழகான பெண் குழந்தையைக் கொடுத்துள்ளார். குழந்தையே பிறக்காதா என்று பல பேர் ஏங்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் உங்களுக்குக் கிடைத்துள்ள அன்பான சுட்டியான பெண்ணை அரவணைப்புடன் வளர்த்து நன்றாகப் படிக்க வைத்து அவளுடைய வருங்கால வளமான வாழ்விற்காக நீங்கள் திட்டமிடலாம்.மனிதர்கள் எதை அடக்கக் கூடாது, எதை அடக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. இயற்கை உந்துதல்களாகிய வாயு, மலம், சிறுநீர், தும்மல், தண்ணீர் தாகம், பசி, தூக்கம், இருமல், வேகநடை அல்லது ஓட்டத்தினால் ஏற்படும் பெருமூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அடக்குவதோ, வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதோ கூடாது என்கிறது. அவற்றை அடக்குவதால் ஏற்படும் நோய்களும், அதற்கான சிகிச்சை முறைகளையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. இம்மையிலும், மறுமையிலும் நன்மையை விரும்புகிறவர், எப்போதும் புலன் அடக்கத்தோடு இருந்து கொண்டு, பேராசை, பொறாமை, பகைமை, குரோதம், வஞ்சனை, துரோகம் நினைத்தல் முதலிய மனதைச் சார்ந்த உந்துதல்களை அடக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் உபதேசிக்கிறது.மனம் சார்ந்த இவற்றைப் பலரும் உங்களிடம் காட்டியிருக்கக் கூடும். அதனால் நீங்கள் வருத்தம் ஏதும் கொள்ளாமல் கணவர், குழந்தை, உறவினர்களுடன் சகஜமாகவும் அன்புடனும் பழகி வருவதே சிறந்தது.உடல் எடை குறைய தேன் கலந்த குளிர்ந்த நீரை காலை இரவு உணவிற்குப் பிறகு அருந்தவும். முட்டி வீக்கம், வலி நீங்க சதகுப்பையை புளித்த மோருடன் அரைத்து, லேசாகச் சூடாக்கி காலை இரவு உணவிற்கு அரை மணி நேரம் முன்பாக இரண்டு முட்டியிலும் பற்று இடவும்.மனதை வலுப்படுத்த மானஸமித்ரம் எனும் ஒரு குளிகையைக் காலை மாலை சிறிது பாலுடன் வெறும் வயிற்றில் சாப்பிடவும். மனம் அமைதியாக இருக்கத் தலையில் பிரம்மீதைலம் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும்.12 அங்குலம் மேலிருந்து சட்டியில் துளையிட்டு அதன் மூலம் நெற்றி, தலை, நெற்றிப் பொட்டு ஆகிய பகுதிகளில் பிரம்மீ தைலத்தை நோயாளி படுத்த நிலையில் ஊற்றச் செய்வது மனம் சார்ந்த உபாதைகளுக்கு நல்ல சிகிச்சை முறையாகும்.மனதை அமைதியுறச் செய்யும் மருந்துகள் பல இருந்தாலும் நோயாளிக்கு நோயாளி அது மாறுபடும். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் பொதுவான மருந்துகள் என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதில் தவறேதுமில்லை.


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நீடித்த...நிலைத்த...நலம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி



நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். மிகவும் ஒல்லியாகவும், தேக வலுவின்மை, மனம் மற்றும் உடல் உறுதியின்மை, நினைத்தவற்றைச் செய்யும் கட்டுப்பாடின்மை, சோம்பேறித்தனம், எண்ணச் சிதறல் போன்றவற்றால் அதிகத் துன்பப்படுகிறேன். இதிலிருந்து தீர்வு எப்படிக் கிடைக்கும்? குமார், களக்காடு. எப்போதும் சுகத்தோடு வாழ வேண்டும் என்று மனிதர்கள் விரும்புவது இயற்கையே. நிலைத்த உடல் மற்றும் மன இன்பத்தைத் தரும் வழிகளை ஆயுர்வேதம் கீழ்காணும் வகையில் கூறுகிறது. 1.காலோ அனுகூல: காலம் அனுகூலமாக இருத்தல். காலம் என்பது பருவமாகலாம். ஜீர்ணாஜீர்ண காலமாகலாம். நோயின் விஸ்வரூபத்திற்கு எதிரான மருந்துகள் மற்றும் செய்கைகள் காலமாகலாம். வயதையும் காலத்தையும் இணைக்கலாம். பருவகாலம் மனிதர்களுக்கு வசப்படாதவை. அதற்குத் தக்கவாறு நம் உடலைப் பாதுகாக்க வேண்டும். கடும் கோடையில் கரும்புச்சாறு, இளநீர், நுங்கு, தர்பூஸ், கிர்ணிப்பழம் போன்றவற்றைச் சாப்பிட்டு, உடல் நீரை வற்றிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளும் செயல்களில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்தவும். வெளியே தெரியும் இந்தக் கால மாற்றத்தைப் போல, நீங்கள் உங்களுடைய உடல் உட்புற மாற்றங்களை மலம், சிறுநீர், வியர்வை ஆகிய கழிவுகளின் வழியாக நன்றாக அறியலாம். இவற்றில் ஏற்படும் நிறமாற்றம், வாசனை, அளவு, நேர அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவு மற்றும் செயல்களில் செய்யப்படும் மாற்றத்தின் வாயிலாக, நாம் இழந்த ஆரோக்கியத்தை மறுபடியும் பெறலாம். உதாரணத்திற்கு இவை அனைத்தும் மஞ்சள் நிறமாகவும், துர்நாற்றம் கொண்டவையாகவும், அளவில் அதிகமாகவும், அடிக்கடி வெளியேறினால் பித்ததோஷத்தின் சீற்றம் ஏற்பட்டிருப்பதை ஊகித்து, அதற்கு எதிரான கசப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவைகளின் மூலம் பித்தத்தைக் கீழடக்கி, உடல் ஆரோக்கியம் பெறலாம். இதுபோன்ற மாற்றங்களை நீங்கள் கூர்ந்து கவனித்து அவற்றை ஏற்படுத்திய காரணங்களைத் தவிர்த்து ஏற்பட்டுள்ள சீற்றத்தைத் தணிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜீர்ணாஜீர்ணகாலம் என்பது உண்ட உணவு நன்றாக ஜீரணமாகிவிட்ட நிலை அல்லது ஜீரணமாகாத நிலையைக் குறிப்பது. இவ்விஷயத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். விடும் ஏப்பம் சுத்தமாக இருத்தல், உற்சாகம், மலம் சிறுநீர் தடையின்றி வெளியேறுதல், உடல் லேசாக இருத்தல், பசி தாகம் நன்றாக எடுத்தல் போன்றவை, நீங்கள் முன் உண்ட உணவு நன்றாகச் செரித்துவிட்டதற்கான அடையாளங்கள். இவற்றிற்கு நேர்எதிரான அடையாளங்கள் வயிற்றில் உணவுத் தேக்கத்தைத் தெரியப்படுத்துகின்றன. அவற்றின் தேக்கம் நீங்கும் வரை நீங்கள் அடுத்த உணவைச் சாப்பிடாதிருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். ஒரு நோய் உங்களிடம் விஸ்வரூபம் எடுத்தால் அதை உதாசீனப்படுத்தாமல் உணவு மற்றும் மருந்துகளைச் சரியான முறையில் அமைத்து அதிலிருந்து விரைவில் விடுபட முயற்சி செய்வது நீண்ட ஆயுளுக்கான வழியாகும். கப தோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, மினுமினுப்பு, நிலைப்பு ஆகியவை காணப்பட வேண்டிய உங்களுடைய வயதில் ஒன்றையும் காணவில்லை. அதற்குக் காரணம் பசித் தீயின் செயல்திறன் உங்களுக்கு மந்தமாகியுள்ளது. பசித்தீயை வளர்க்கும் உணவையும் மருந்தையும் மருத்துவரிடம் நீங்கள் உங்களுடைய உடலைக் காண்பித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 2.விஷயா மனோஞா: மனதை இன்பமுறச் செய்யும் செய்கைகளில் ஈடுபடுத்துதல். மனமகிழ்ச்சியால் உடல் புஷ்டி ஏற்படும். மனத்துன்பம் உடல் வாட்டத்தை ஏற்படுத்தும். 3. தர்ம்யா:கிரியா: செய்யும் செயல்கள் அனைத்தும் தர்மத்திற்கு உட்பட்டவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதுவே உடல் மற்றும் மனவலிமைக்கு சிறந்த விதையாகவும் அமையும். 4. கர்ம ஸýகானுபந்தி: நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் சுகமான அனுபவத்தைத் தரும்படியாக இருக்க வேண்டும். தீய செயல்கள் என்றும் சுகத்தைத் தராது. 5. சத்வம்விதேயம்: சத்வம் என்றால் மனம். விதேயம் என்றால் சுதந்திரம். சுதந்திரமான உள்ளத்திற்கு விவேக சக்தி கூடுகிறது. நல்லதும் கெட்டதும் அது போன்ற உள்ளத்தினால் நன்கு ஆராயப்பட்டு, நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, உள்ளம் சுதந்திரமாக இருக்கும்போது பெறுகிறது. 6.விசதா புத்தி: தெளிந்த அறிவு. நல்ல நண்பர்களின் சேர்க்கையினாலும், சான்றோர்களின் சொற்பொழிவுகளின் மூலமாகவும் நீங்கள் தெளிந்த அறிவைப் பெற்றால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உபாதைகள் பலவும் நீங்கிவிடும். 7.தீரஸ்ய: நல்லவற்றை மனம் நாடி, தெளிந்த அறிவைப் பெற்று அதைச் செயலாக்குவதில் வைராக்யம் கொண்டிருத்தல். மேற்குறிப்பிட்ட ஏழு விஷயங்களிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு நீடித்த நிலைத்த இன்பத்தை நீங்கள் நிச்சயம் பெறலாம்.

நன்றி தினமணி கதிர்

No comments: