Saturday, April 25, 2009

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளையைப் பாதுகாக்க...

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்


பார்கின்ஸானிஸம் என்ற மூளை பாதிப்பு நோய் தாக்கியவர்களது செயல்பாடுகள் மிகவும் ஆமை வேகத்தில் இருக்கும். இந்த நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளனவா? இந்த நோய் தாக்குவதற்கான காரணங்கள் எவை?எஸ்.அனந்தராமன், சென்னை - 40.

மனிதர்களுடைய மூளைப் பகுதியை ‘பிராணன்' என்ற வாயுவும், ‘தர்ப்பகம்' என்ற கபமும் தம் செயல்களின் மூலம் அறிவு, புலன்கள், நாடிகள் எனப்படும் நரம்பு மண்டலங்கள் இவற்றை நிலைநிறுத்தச் செய்கின்றன. இந்த இரு தோஷங்களின் சீற்றம், மூளையைச் சார்ந்த நரம்பு மண்டலங்களையும் அங்கிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் திரவக் கசிவுகளையும் பாதிப்படையும் வகையில் தாக்குவதால், உடல் அசைவுகள் மந்தமாகுதல், விரைப்பு, தன்னிச்சையாக கைகள் நடுங்குதல், கைகளில் வலுவற்ற தன்மை போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும் முகத்தைச் சார்ந்த தசைகள் அசைவற்று, கண்களை மூட முடியாமல், வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருக்கும் உபாதைகளும் காணத் தொடங்கும். நடக்கும்போது உடல் முன்னோக்கி வளைவதும், குறுகிய தள்ளாட்டத்துடன் கூடிய தடுமாற்றங்களும் ஏற்படும். சிலருக்குத் தரையில் ஒரு குச்சி அல்லது கம்பு ஒன்றைப் போட்டுத் தாண்டச் சொன்னால், அதைத் தாண்டியவுடன் நடை சீராக, தடுமாற்றம் குறைந்து சிறிது தூரம் வேகமாகவும் நடப்பார்கள். வாதத்திற்கும் கபத்திற்கும் சமமான குணம் ‘சீதம்' எனப்படும் குளிர்ச்சி மட்டும்தான். மற்ற குணங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேராதவை. அதனால் குளிர்ச்சி எனும் குணத்தைக் கொண்ட உணவு வகைகளாலும், செயல்களாலும் பருவ காலத்தினாலும் இந்த நோயின் தாக்கம் எளிதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தலையில் அடிக்கடி குளிர்ந்த நீரை விட்டுக் குளித்தல்,. அப்படி குளித்தபிறகு தலையைச் சரியாக துடைத்துக் கொள்ளாமல் தலைமுடியை வாரிக் கொள்ளுதல், தேங்காய் எண்ணையைத் தலையில் தேய்த்துக் கொண்டு, காலையில் இளம் வெயில் அல்லது விடிகாலையில் நடைப்பயிற்சி செய்தல், தூங்கும்போது அதிக அளவில் ஏசியை வைத்துக் கொள்ளுதல், தலைப்பகுதியில் டேபிள் மின்விசிறியின் காற்று படும்படி படுத்துக் கொள்ளுதல், இரவில் படுக்கும் முன் குளிர்ந்த நீரைப் பருகுதல், குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சில்லிட்டுப் போன பழங்கள், பழ ரசங்கள், பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை எடுத்து அடிக்கடி சாப்பிடுதல், சில்லிட்டுள்ள தரையில் கால் பாதங்களை வைத்திருத்தல், உடல் வியர்த்துள்ள நிலையில், ஐஸ் தண்ணீரைப் பருகுதல், உணவில் குளிர்ச்சியான வீர்யத்தைக் கொண்ட வெள்ளரிக்காய், பூசணிக்காய், புடலங்காய், வெண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுதல், தவறான விதத்தில் யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் போன்ற சில காரணங்களால் தலையைச் சார்ந்த வாத - கப தோஷங்கள் சீற்றமடைந்து நரம்புகளை வலுவிழக்கச் செய்கின்றன.இந்நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சைகள் பல உள்ளன. மூக்கினுள் மூலிகைத் தைலத்தை விடுதல், காதுகளில் எண்ணெய் நிரப்புதல், முகத்தில் மூலிகைத் தைலத்தைத் தடவி, பூண்டு வேகவைத்த சூடான பாலிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படும்படி செய்தல், தலையில் எண்ணைய்யை நிரப்பி ஊறவிடுதல், குடலுக்கு நெய்ப்புத் தரும் விளக்கெண்ணெயைப் பருகச் செய்து மலம் கழிக்க வைத்து அதன் பிறகு ஆசனவாய் வழியாக மூலிகைத் தைலம் மற்றும் கஷாயங்களைச் செலுத்தி குடலில் தேங்கியுள்ள வாயுவை வெளியேற்றுதல், உடல் சுத்தி முறைகள் அனைத்தையும் செய்த பிறகு, மூளைத் திசுக்கள், நரம்புகள் வலுப்படும் வகையில் மூலிகைக் கஷாயங்களைப் பாலுடன் கலந்து பருகுதல் போன்றவை சிகிச்சை முறைகளாகும்.விதார்யாதி கிருதம், தசமூல ரசாயனம், அஸ்வகந்தாரிஷ்டம், தலைக்கு க்ஷீரபலா தைலம் போன்ற சிறப்பான மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வருவதன் மூலமாக, பார்கின்ஸானிஸம் எனும் கடுமையான உடல் உபாதையின் தாக்கத்தை நன்றாகக் குறைக்க முடியும்.
(தொடரும்)



ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: "பிளீச்' செய்யாமல் "பளிச்' முகம்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
First Published : 31 May 2009 11:21:00 PM IST


அழகு நிலையங்களில் உடலில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்குவது, முகத்தைப் "பிளீச்' செய்து கொள்வது போன்ற செயல்களை இளம் பெண்களும், இளம் ஆண்களும் தற்சமயம் அதிகம் செய்து வருகின்றனர். அபாயகரமான ரசாயனக் கலவை கொண்ட இவற்றைப் பயன்படுத்தாமல் ரோம வளர்ச்சி குறைய பெண்கள் ஹார்மோன் சிகிச்சையைத் தவிர்க்கும்விதத்தில் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் உள்ளனவா? எஸ்.அனந்தராமன், சென்னை - 40.

பெண்களுக்கு முகம் மற்றும் உடலில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க சில எளிய விஷயங்களை ஆயுர்வேதம் கூறுகிறது.
* அகில் கட்டையை நன்றாகத் தூளாக்கி தயிரின் மேல் நிற்கக் கூடிய தண்ணீரில் குழைத்து தேவையற்ற ரோம வளர்ச்சிப் பகுதிகளில் தேய்த்து, சிறிது ஊறிய பிறகு கழுவி வர அவை உதிர்வதுடன் மேனி அழகு கூடும்.ஊ கட்டை சந்தனத்தை இழைத்து அதில் குங்குமப் பூ மற்றும் சிறுநாகப் பூ பொடித்துச் சேர்த்துப் பூசி, சிறிது ஊறிய பிறகு அலம்பி விட, தேவையில்லாத மீசை, கிருதா போன்ற முடிகள் நாளடைவில் உதிர்ந்து விடும்.
* புங்கம் விதை, பச்சிலை, வாஸனக்கோஷ்டம் ஆகியவற்றைப் பொடித்து குளிர்ந்த நீரில் கரைத்து முகம் மற்றும் உடலில் பூசிக் குளிக்க, முடிகள் தேவையில்லாத பகுதிகளிலிருந்து உதிர்வதுடன் உடலிலிருந்து கெட்ட மணமும் அகலும்.
* நலங்குமாவு எனப்படும் பாசிப் பயறு, வெட்டிவேர், சந்தனம், விலாமிச்சை வேர், கோரைக் கிழங்கு, கார்போக அரிசி, பூலாங்கிழங்கு இவை அனைத்தையும் ஒரே அளவில் சேர்த்து இடித்த தூளை தயிர்த் தெளிவுடன் பூசிக் குளிக்க, தேவையற்ற முடிகள் உதிர்வதுடன் நல்ல மணத்தை உடலுக்குத் தரக்கூடியதாகும்.
* வசம்பு, கொத்தமல்லிவிதை, லோத்திரப்பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூச முகப் பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* கடுக்காய், மாம்பருப்பு, லவங்கப் பத்திரி, ஜடாமஞ்சி, நாவல் இலை, வாசனைக்கோஷ்டம், நெல்லிமுள்ளி, கோரைக் கிழங்கு ஆகியவற்றைப் பொடித்து தண்ணீரில் கலந்து உடலெங்கும் பூசிக் குளிக்க முக அழகைக் கெடுத்துக் கொண்டிருக்கும் முடிகள் உதிர்ந்து உடலில் மணமும் அழகும் கூடும்.
* மஞ்சிட்டி, லோத்திரப்பட்டை, ஆலம் விழுது, வாசனைக் கோஷ்டம், மஸýரப்பருப்பு, தினைமாவு, செஞ்சந்தனம் ஆகியவற்றைப் பொடித்து தண்ணீருடன் கலந்து முகத்தில் பூசி சிறிது ஊறிக் கழுவி வர, ரோம வளர்ச்சி நீங்குவதுடன் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* மாதுளம்பட்டை, வேப்பம்பட்டை, ஏழிலம்பாலைப் பட்டை, லோத்திரப்பட்டை, கடுக்காய்த்தோல் ஆகியவற்றை நன்றாகப் பொடித்துத் துணியால் சலித்து சந்தனத்தூள் மற்றும் ஃபேஸ் பவுடருடன் கலந்து பூசி வர, பெண்களின் உடல்நாற்றம் நீங்கி தேவையற்ற முடியும் உதிரத் தொடங்கும்.
* மஞ்சிட்டி, பூங்காவி, மஞ்சள், மரமஞ்சள், கடுகு, பொடித்துத் தூளாக்கி, ஆட்டுப் பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஊறவைத்து முகம் கழுவி வர முகம் களையுடன் அழகாகவும் தேவையற்ற ரோமங்களையும் நீக்கிவிடும்.
* ஆண்கள் முகம் அழகாக இருக்க மஸுரப் பருப்பை பால் விட்டரைத்து முகத்தில் பூசி ஊற வைத்துக் கழுவ முகம் சிவந்து வனப்புடன் காணும்.
* தினமும் கடுகெண்ணையை மாலையில் முகத்தில் தடவித் தேய்த்துக் குளிக்க முகம் மென்மையும் மழமழப்பும் பெறும்.
* மிளகு, கோரோசனை இரண்டையும் அரைத்துப் பூச ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* அதிமதுரம், லோத்திரப்பட்டையுடன் அவை அரிசியைப் பொடித்துச் செய்யப்பட்ட மென்மையானவற்றைக் கலந்து குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் பூசி 2 - 3 மணி நேரம் ஊற வைத்து அலம்பிவிட முகம் அழகாக மாறும். ஆண்மையைப் போற்றும் அஸ்வகந்தாதி லேஹ்யம், சித்த மகரத்துவஜம், அமுக்கரா சூரணம் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமும் ஆண்களுக்குத் திரண்ட உருண்ட வலுவான அகன்ற தோள்கள் அமையும். பெண்மையை வளர்க்கும் அசோககிருதம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்றவை மென்மையும் வனப்பையும் அழகையும் பெண்களுக்குத் தருபவை. செயற்கை முறைகளைத் தவிர்த்து இயற்கை நமக்களித்துள்ள இவற்றைப் பயன்படுத்தி அழகாக, மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்வோம்.

----------------------------------------------------------------------------------------------------
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாதகபம் நீங்க...
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்


பெருங்காயம் என்றால் என்ன? அதன் பூர்வீகம் எங்கே? அதன் மருத்துவ குணங்கள் என்ன?
நே.சம்பத், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரியாங்குப்பம்.

பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.

இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ்சிவப்பான பிசினும் கருப்பு வகையில்தான் சேர்க்கப்படும். வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்ல மணமும் மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டதுமாகும்.

கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. இந்தப் பெருங்காயத்தைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் கோந்து போலக் காணும். அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ்சும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயமானால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம் போலப் பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும். பெருங்காயத்திலுள்ள "ஓலியோ ரெஸின்' மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.

பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.

கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறார்.

ஸþம்ருத சம்ஹிதை எனும் நூல், பெருங்காயத்தைப் பற்றி மேலும் சில வர்ணனைகளைச் சேர்க்கிறது. சுவை மற்றும் ஜீரண இறுதியில் காரமானது, எளிதில் செரித்துவிடும். தீபனம் (பசித்தீயைத் தூண்டிவிடும்), ஸ்நிக்தம்(உடல் உட்புற நெய்ப்பைத் தரும்), ஸரம் (மலக்கட்டை உடைத்து மலத்தை வெளியேற்றும்).

சரகஸம்ஹிதை வாதகபாபஹம் என்கிறது. அதாவது வாதகபநோய்களை நீக்குகிறது. பெருங்காயத்தை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதில் விட காது வலி தீரும். இத்துடன் உளுந்து சேர்த்துத் தணலிலிட்டுப் புகைத்து அந்தப் புகையை உள்ளிழுக்க வயிற்று உப்புசத்துடன் ஏற்படும் மூச்சிரைப்பு மற்றும் இருமல் தணியும். பெருங்காயத்தைத் தண்ணீர் விட்டரைத்து மேல்பூசிச் சூடு காட்ட தேள்கடி வேதனை குறையும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே)

No comments: