Sunday, July 12, 2009

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிகப் பசி...அதிக சோர்வு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்


நான் சர்வசாதாரணமாக 8 முதல் 10 இட்லிகள் சாப்பிடுகிறேன். அதுபோலவே 8 - 10 சப்பாத்திகள், பூரி, தோசை என்றெல்லாம் சாப்பிட்டாலும் அவை அனைத்தும் விரைவில் ஜீரணமாகி, மறுபடியும் பசி எடுத்துவிடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? அதிகப் பசியினால் உடல் சோர்ந்து, வாய் வரண்டு போகிறது. இந்த உபாதை தீர ஆயுர்வேத மருந்துகளும், என்ன உணவு வகைகளும் சாப்பிட வேண்டும்?

ரங்கராஜன், சென்னை.

உடலில் இயற்கையாக இருப்பதைவிட கபம் குறையும் போது பித்தம் சீற்றமடைந்து பசித்தீயின் அருகில் தங்கும். வாதத்துடன் சேர்ந்து தனக்கு உரியதான இயற்கைச் சூட்டினால் சீரணப்பையில் உள்ள நெருப்பிற்கு வலிமையைக் கொடுக்கும். இவ்வாறு பித்தத்தின் சூட்டினாலும் வாதத்தின் தூண்டுதலினாலும் வீறு கொண்ட பசித்தீ வரண்டு போன உடலில் உணவை லட்சியம் செய்யாமல் எத்தகைய உணவையும் விரைவில் அடிக்கடி எளிதில் செரிக்கச் செய்துவிடும். அத்துடன் நில்லாமல் உணவு சீரணமானதும் வலிமை பெற்ற பசித்தீக்கு உணவில்லாவிடில் இரத்தம் முதலிய தாதுக்களையும் எரிக்கும். அதனால்தான் உங்களுக்கு உடல் சோர்ந்து வாய் வரண்டு போகிறது.

நன்றாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை நீர் ஊற்றி அணைப்பதுபோல எளிதில் செரிக்காத எண்ணெய்ப் பசை, குளிர்ச்சியான வீர்யம் மற்றும் இனிப்புச் சுவை கொண்ட நீர்த்தோற்றத்தில் உள்ள குடிநீர் வகைகள், எள்ளுடன் கலந்து பக்குவம் செய்யப்பட்ட இறைச்சி மாவினாலும் வெல்லத்தினாலும் செய்யப்பட்ட உணவு வகைகள் முதலியவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள பசித்தீயைச் சமப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் பால் பாயசம், பயத்தம் பருப்பு, நெய் இவற்றைச் சேர்த்து பக்குவம் செய்த சாதம், நெய்யில் பக்குவம் செய்த தின்பண்டங்கள், நிலையாக நிற்கும் தண்ணீரில் வாழும் மீன் போன்ற பிராணிகளுடைய இறைச்சிகள், கொழுத்த செம்மறியாட்டின் மாமிசம் முதலியவற்றையும் மிகுதியான பசித்தீயைத் தணிப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

1 டம்ளர் (சுமார் 250 கிராம்) பச்சரிசியில், 6 டம்ளர் தண்ணீர் விட்டு, சாதம் வெந்தவுடன் வடிகட்டி, அந்தக் கஞ்சியில், 5 கிராம் தேன் மெழுகு கலந்து உணவாகப் பருகலாம்.

1 டம்ளர் கோதுமையை வறுத்து மாவரைத்து நெய் கலந்து, சுமார் 4 - 5 டம்ளர் தண்ணீர் கலந்து கஞ்சியாகக் காய்ச்சி மதிய உணவிற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகப் பருக மிக நல்லது.

அரை டம்ளர் எள்ளு, அரை டம்ளர் உளுந்து முதலியவற்றை நன்றாக அரைத்துச் சுடுநீர் சர்க்கரை சேர்த்து உருண்டைகளாக்கிப் பக்குவம் செய்து உட்கொள்ளச் செய்தால் வீறு கொண்ட பசித்தீ மென்மையடையும்.

எண்ணெய்ப் பசையுள்ள மாமிச சூப்பைப் பருகுவது, நெய்யில் தேன் மெழுகு கலந்து குளிர்ந்த நீரும் கலந்து பருகுதல், கோதுமை மாவை நெய்யும் அல்லது பாலும் கலந்து உண்பது முதலியன நல்லது.

நெய், மாமிசத்திலுள்ள எண்ணெய்ப் பகுதி, எலும்புக்குள்ளிருக்கும் மஜ்ஜை இம்மூன்று வகை எண்ணெய்களையும் கோதுமை மாவுடன் கலந்து பாலுடன் சேர்த்துச் சாப்பிட, பசித்தீ அடங்கும். இதைச் சாப்பிட்ட பிறகு, பகலில் படுத்துத் தூங்குவது நல்லது.

இவ்வாறு கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிடுவதால் குறைந்துபோன கபம் வளரும். சீற்றமாயிருந்த பித்தமும் தணியும். வாதம் இயற்கை நிலையை அடையும். சடராக்கினி எனும் பசித்தீ சமநிலையை அடையும். தாதுக்கள் இயற்கைநிலையில் இருக்கும். சமநிலையிலுள்ள அக்கினி உணவைச் சரியாகப் பக்குவம் செய்து உடல் வளர்ச்சி ஆயுள் வலிமை இவற்றை வளர்க்கிறது.

மிருத்வீகாதி லேஹ்யம், பரூஷகாதி லேஹ்யம், அமிருத ப்ராசம் கிருதம், ப்ருகத்சாகலாதிகிருதம், சங்கபஸ்மம், ஹிங்குல பஸ்மம், அப்ரக பஸ்மம், விதார்தியாதி லேஹ்யம், திகார்ஷாதி கஷாயம் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள் கொழுந்துவிட்டு எரியும் பசித்தீயைச் சாந்தப்படுத்தும் வீர்யம் கொண்டவை. உங்களுக்கு அருகாமையிலுள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகி, எது தங்களுக்குப் பொருந்துமோ அதை அவரிடமிருந்து வாங்கிச் சாப்பிட்டு உபாதையிலிருந்து விடுபடலாம்.

1 comment:

aarronabdullah said...

Stainless Steel Joint of SEGA - Titanium Blades
Stainless Steel titanium grey Joint of SEGA. titanium ecm titanium hammer with the traditional ti89 titanium calculator slanted angle of a blade. titanium ring The blade is coated in metal titanium sheet metal oxide.