Saturday, November 21, 2009

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இளநரை... முதுநரை... எதுவரை?
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்



இப்போது பரவலாக இருக்கும் பிரச்னை இளநரை. இதனால் பலரும் ஹேர் டை உபயோகிக்கிறார்கள். ஆனால் அவை கெமிக்கல் டை என்பதால் பல கெடுதல்கள் ஏற்படுகின்றன. இயற்கையான முறையில் முடி கருப்பாக வளர என்ன செய்ய வேண்டும். இயற்கை ஹேர் டை எப்படித் தயாரிப்பது?கலைமுருகன்,மயிலாடுதுறை.

திரிபலா சூரணத்துடன் அதி மதுரமும் பொடித்துச் சேர்த்து ஆயுர்வேத மருந்துக் கடைகளில் திரிபலாதி சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஓர் இரும்புச் சட்டியில் சுமார் 50 கிராம் திரிபலாதி சூரணத்தைப் போட்டு, நீலி பிருங்காதி எனும் தைலத்தை சிறிது விட்டு இளந்தீயில் வறுக்கவும். வெளிர் மஞ்சள் நிறத்திலுள்ள திரிபலா சூரணம், கொஞ்சம் கொஞ்சமாக கறுப்பாகத் தொடங்கும். நன்றாகக் கறுப்பாக மாறியதும், அதிகம் வறுத்துவிடாமல், அதைக் கீழே இறக்கி, சூடு ஆறும் வரை இரும்புச் சட்டியிலேயே வைத்திருக்கவும்.அதன் பிறகு கறுப்பாக மாறிய இந்தச் சூரணத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். இந்தப் பொடியை சிறு அளவில் ஒரு கிண்ணத்தில் எடுத்து, நீலி பிருங்காதி தைலத்தைக் கொஞ்சமாக விட்டுக் குழைத்து ஹேர் டை பிரஷ்ஷில் நனைத்து, வெளுத்துப் போன முடிகளில் வேர் முதல் நுனி வரை மெதுவாகத் தடவ, முடி கருப்பாகத் தெரியும். இது ஒரு புதிய முயற்சியே. முடிக்கு எந்தவிதமான கெடுதலும் செய்யாது. கண்களுக்கும்,தோலுக்கும் நல்லது. இதிலுள்ள ஒரு சிறுகுறை தலைக்குக் குளித்தவுடன் இந்தச் சாயம் நீங்கிவிடும். தலைக்கு நல்லது என்பதால் இந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

அசல் இரும்புத் துண்டை அரத்தினால் ராவி மிக நுட்பமான இரும்புப் பொடி 300 கிராம் தயாரித்து, வாயகன்ற பீங்கான் பாத்திரத்தில் வைத்து, பொடி நன்றாய் மூழ்கும் அளவு பசுவின் சிறுநீரை ஊற்றி வெயிலில் வைக்கவும். இவ்விதம் 7 நாட்கள் தினம்தோறும் புதிதுபுதிதாய் பசு மூத்திரம் ஊற்றி வெயிலில் வைக்கவும். அதன் பிறகு இரும்புத்தூள் பழுக்கும் வரை இரும்புச் சட்டியில் சூடாக்கி, சூடு ஆறியதும் அம்மியில் அரைக்க வேண்டும். இரும்புப் பொடிக்குச் சமமாக வாயு விடங்கம் 300 கிராம், தேன் நெய் சற்றுத் தூக்கலாகச் சேர்த்து அரைக்கவும். இந்த லேகியத்தை வேங்கை மரத்தின் வைரத்தினால் செய்யப்பட்ட சம்புடத்தில் பத்திரப்படுத்த வேண்டும். அதன் மூடியும் வேங்கை மரமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு வருடம் அதன் உள்ளே வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு காலையில் 3 கிராம், மாலையில் 3 கிராம் அளவு சாப்பிடலாம். 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மயிர் நன்றாக கறுப்பாகி வளரும். ஆயுள்காலம் பூராவும் கேசம் கறுப்பாகவே இருக்கும். நல்ல பலமாகவும் இருக்கும்.

இளநரைக்கு முக்கியமான காரணம், உடலில் பித்த தோஷத்தின் இயற்கைக் காரியம் குன்றுவதும், கெடுவதும்தான். தலைமுடியின் நரை நீங்க அதற்குத் தகுந்த தைலங்களைத் தலையில் தேய்ப்பது மட்டும் முற்றிலும் போதுமானதல்ல. இக்காலத்தில் பூசப்படும் ஹேர் டை, முடிக்குக் கெடுதலை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். அதனால் செயற்கைச் சாயம் பூசுவது கெடுதல். மேலுக்குத் தகுந்த தைலங்கள் பூசிக் கொண்டு உள்ளுக்கும் இதுபோன்ற ரசாயனம் சேவிப்பதே நன்மை தரும்.

விற்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் சியவனப்ராசம் லேஹ்யம், நாரசிம்ஹ ரசாயனம், குமார்யாஸவம் லோஹ பஸ்மம் போன்ற உள் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட மிகவும் நல்லது.

No comments: